குமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான படந்தாலூமூடு பகுதியில், காவல் மற்றும் போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இங்கு கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களையும், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களையும் பதிவு செய்ய 200 முதல் 1,000 ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதேபோல் காவல் சோதனைச்சாவடியில், அதிக பாரத்துடன் வரும் வாகனங்களுக்கு அனுமதியளிக்க 1,000 முதல் 5,000 ரூபாய் வரை லஞ்சம் பெறப்படுவதாகவும் புகார் வந்தது. இதைத்தொடர்ந்து அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மதியழகன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முதல் விடிய விடிய சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .
களியக்காவிளை போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் இருந்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் அதிக பணமும், படந்தாலூமூடு காவல்துறை சோதனைச்சாவடியில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணமும் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக காவலர்கள் நான்கு பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: காவல்துறையினர் போல் நடித்து வீடு புகுந்து கொள்ளை!