கன்னியாகுமரி மாவட்டம் களியல் வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் சிலர் வனத்துறையினரால் தடைசெய்யப்பட்ட குளத்து பச்சை தவளையை வேட்டையாடி அதை சமைத்து உண்டதுடன், அதை வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் அசோக் குமாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அலுவலர்களிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த விசாரணையில், டேஞ்சர் தமிழன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த டேனியலும் அவரது நண்பர் சுதீரும் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்கள் வனத் துறையினரால் தடைசெய்யப்பட்ட குளத்து பச்சை தவளையை வேட்டையாடியதுடன், அதனை சமைத்து யூடியூபில் வீடியோ பதிவேற்றியுள்ளனர். இதையடுத்து, இவர்கள் மீது வனத்துறை சட்டம் 1972 பிரிவு 2 (16)இன் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் அவர்களிடம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மயில் வேட்டையாடியவர்கள் கைது: துப்பாக்கி பறிமுதல்