கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே கப்பியறை ஓலவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் ஜிபின் (வயது 25). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஜிபின் வேலை பார்த்து வருகின்றார்.
இந்நிலையில், உறவினர் ஒருவரின் வீட்டு புதுமனை புகுவிழாவில் பங்கேற்ற தனது சொந்த ஊருக்கு நண்பர்கள் சிலருடன் கடந்த சில தினங்களுக்கு முன்வந்தார்.
கொண்டாட்டத்துக்காக நேற்று (டிசம்பர் 30) மாலை ஆலஞ்சி பாரியக்கல் கடற்கரைக்கு சென்ற அவர்கள், அங்கு ஆர்வமிகுதியில் கடலின் உள்ளே சென்றனர். தொடர்ந்து, அங்குள்ள பாறையில் நின்று ‘செல்பி' எடுத்தபடி இருந்தனர்.
அப்போது, எதிர்பாராத வகையில் கடலில் இருந்து எழுந்த ராட்சத அலை அவர்கள் மீது மோதியது. மோதிய வேகத்தில் ஜிபின், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் துலுக்காத்தம்மன் தெருவைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவரான பாலாஜி (19), சுரேஷ் (28) ஆகிய 3 பேரையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது. இதில் சுரேஷ் மட்டும் கரை சேர்ந்தார். மற்ற 2 பேரையும் காணவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மீனவர்களின் உதவியுடன் மாயமான இருவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிள்ளியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார், கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர் உள்ளிட்ட அலுவலர்கள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருகைத் தந்து தேடலை தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையே கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தியாகிகள் பென்ஷன் வழங்க மறுப்பு தெரிவித்த விவகாரம் - மீண்டும் வழிவகை செய்ய புதுவை அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு