குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செபஸ்டின் பிரிட்டோ, தஞ்சாவூரைச் சேர்ந்த அவினாஷ் என்ற இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து ரஷியாவிற்கு தனியார் கப்பல் மூலம் எல்.பி.ஜி கேஸ்களை ஏற்றி சென்றிருந்தனர்.
அப்போது ஜனவரி 21ஆம் தேதி ரஷியா அருகே சென்ற கப்பலில் எல்.பி.ஜி கேஸ் கசிவின் மூலம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கப்பலில் இருந்தவர்கள் பலர் உயிர் தப்பித்துள்ளனர். ஆனால், கப்பலில் இருந்த தமிழர்கள் 2 பேரின் நிலைமட்டும் என்னவென்று தெரியவில்லை, இதனால் அவர்களை மீட்கக்கோரி சகாயம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் காணமல்போன இருவர் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யவேண்டும் என்றும்; அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் காணாமல் போனவர்களை தேடும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: காணாமல் போன சிறுவன் வழக்கை டிஎஸ்பி விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!