கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், அதைக் கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் குளச்சல் உட்கோட்ட ஏ.எஸ்.பி விஷ்வேஷ் சாஷ்த்ரி மேற்பார்வையில், தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று(டிச.13) சுங்காங்கடைப் பகுதியில், சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து இரணியல் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் தக்கலைப் பகுதியைச் சேர்ந்தவ வினோத் குமார்(28), ராஜேஷ்(20) என்பதும் இரணியல், கருங்கல், தக்கலை, கடலூர் மாவட்டம் பண்ரூட்டி ஆகியப் பகுதிகளில் அவர்கள் தொடர் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
சகோதரர்களான இவர்கள், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் சென்று கொள்ளையில் ஈடுபட்டால், கன்னியாகுமரி தக்கலையில் தலைமறைவு ஆவதையும், தக்கலைப் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டால், கடலூர் பகுதியில் தலைமறைவு ஆவதையும் வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து 29 செல்போன்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள், 5 சவரன் தங்க சங்கிலி உள்ளிட்டப் பொருள்களை கைப்பற்றினர். பின்னர், இருவரும் இரணியல் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: வங்கிக் கடன் மோசடி: ஊழியரிலிருந்து கார் டீலர்கள் வரை செக்