குமரி மாவட்டம் நாகர்கோவிலில் யுனிக் புரமோட்டர்ஸ் அண்ட் எஸ்டேட் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தை திருவிதாங்கோடு செய்யதலி, அழகிய மண்டபம் சசிதரன் எட்வின் சுதாகர், மார்த்தாண்டம் ரமேஷ் உள்ளிட்டோர் நடத்தி வந்துள்ளனர்.
இவர்கள் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியதால் நாகர்கோவிலைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும், தனது தாயார் பெயரிலும் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார். கடந்த 2019ஆம் ஆண்டு முதிர்வு தொகையை திரும்ப கேட்டபோது, வசந்தகுமாரிடம் இருந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளனர்.
இதனால் ஏமாற்றமடைந்த வசந்தகுமார், நிறுவனத்தின் நிர்வாகள் மீது அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் செய்யது அலி, சசிதரன் எட்வின் சுதாகர் ஆகியோர் இன்று காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். மேலும் இதில் சம்பந்தபட்டவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், இந்த நிதி நிறுவனத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் தங்களது அசல் அல்லது நகல் ஆவணங்களை நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாருடன் சமர்ப்பிக்குமாறு குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் டிவி அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு பார்சல்: 10 வருடத்திற்குப் பிறகு குற்றவாளி கைது!