கன்னியாகுமரி:சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு ஆண்டிற்கு மூன்று சுற்றுலா சீசன் உள்ளது. அதில் மிகப் பெரிய சீசன் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் வரும் சீசனாகும். கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் சீசன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு தெரியும் ஜனவரி 15ஆம் தேதி வரை இந்த சீசன் தொடரும். குறைந்தது இரண்டு மாத காலம் இருக்கும் இந்த சீசனில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும்
வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இங்கு வரும் பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி திரிவேணி சங்கமம் , சங்கிலித் துறை பகுதி கடற்கரை பீச், சுனாமி பூங்கா ,சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதுடன் கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா படகுகளில் சென்று பார்வையிடுவதும் வழக்கம்.
இதற்காக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அலைமோதுவது இந்த குறிப்பிட்ட காலமாகும். அந்த வகையில் ஆண்டின் மிகப்பெரிய ஐயப்ப பக்தர்களுடைய சீசன் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. வார விடுமுறையை முன்னிட்டு நேற்று(நவ-20) ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்தனர். மாலையில் சூரிய அஸ்தமத்தை கண்டு செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
மேலும் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கடலில் இறங்கி புனித நீராடி வருவதால் கடலோர காவல் படை குழுமத்தார் மற்றும் கன்னியாகுமரி போலீசார் வழக்கமாக சீசன் காலங்களில் செய்யும் கடலில் பாதுகாப்பு வளையங்கள் உள்ளிட்ட எந்தவிதமான எற்பட்டுகளையும் இந்த முறை செய்யவில்லை .
கடலில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழும் முக்கடல் சங்கமம் படி துறையானது பாசி படிந்து உள்ளது. அங்கு யாரும் குளிக்க முடியாத நிலையில் உள்ளது. அது போல் குடிநீர், கழிவறைகள், உடை மாற்றும் அறை
மின் விளக்குகள் வாகன நிறுத்தங்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்யாததால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
ஆகவே தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்கால நடவடிக்கையாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மங்களூரு ஆட்டோ வெடிகுண்டு விவகாரம்: வெளியான புதிய தகவல்!