கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளூவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சுற்றுலா படகில் சென்று விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.
அந்த வகையில் இன்று (ஜூலை 02) அதிகாலையில் இருந்தே பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகு தளத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நிலையில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகுகள் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் படகுகள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வார விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
நீண்ட வரிசையில் காத்து நிற்கும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கடல் காலநிலை சீரான பின்பு மீண்டும் படகுகள் சேவை தொடங்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ''மின் இணைப்பு துண்டிக்கப்படும்' எனக்கூறி எஸ்.எம்.எஸ் வந்தால் எச்சரிக்கையா இருங்க' - எச்சரித்த சங்கர் ஜிவால்