கன்னியாகுமரி: இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (நவ. 24) மதியம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தடைந்தார்.
அங்கு அவரை மாவட்ட ஆட்சியர் அரவிந்த், தென்மண்டல ஐஜி அன்பு, டிஐஜி பிரவின்குமார் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து ஆளுநருக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
குடும்பத்துடன் தியானம்
பின்னர் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த அவர், மாலையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் இருந்து படகு சவாரி செய்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றார்.
அங்குள்ள தியான மண்டபத்தில் தனது குடும்பத்தினருடன் சுமார் 15 நிமிடம் தியானம் செய்தார். தொடர்ந்து, திருவள்ளுவர் சிலைக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பலத்த பாதுகாப்பு
பயணத்தின் இரண்டாவது நாளான இன்று (நவ. 25) விவேகானந்த கேந்திர வளாகம் சென்று சூரிய உதயத்தை கண்டு ரசிக்கின்றார். இதனையடுத்து, விவேகானந்த கேந்திர நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபடும் அவர் அங்கிருந்து ராமாயண தரிசன கூடத்தைப் பார்வையிடுகின்றார்.
பின்னர், அங்கிருந்து சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஆளுநர் வருகையை ஒட்டி மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தலைமையில் காவல்கிணறு முதல் கன்னியாகுமரி வரை 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.