கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் 66 வயதுடைய நபர். இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்துவந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது மகன் சவுதி அரேபியா நாட்டில் பணிபுரிந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி ஊர் திரும்பியுள்ளார்.
இந்நிலையில் திடீரென காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு அந்த நபர் மருத்துவ பரிசோதனை பெற்றுவந்தார்.
ஏற்கனவே அவரது ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் கரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென இன்று காலை அவர் மரணம் அடைந்தார்.
அதேபோல், முட்டம் பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது ஆண் குழந்தை மற்றும் திருவட்டர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஆகியோரும் இன்று உயிரிழந்தனர். இவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இதுவரை கரோனா நோய் பாதிப்பு அறிகுறிகளுடன் 50 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 33 பேர் கரோனா தொற்று இல்லாதவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும், 17 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தொடர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
முன்னதாக, ராமன் புதூரைச் சேர்ந்த பெண் ஒருவரும், கோடிமுனையை சேர்ந்த ஆண் ஒருவரும் ஏற்கனவே கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடும்ப உறவை வலுவாக்குங்கள் - கரோனா கொடுத்த பொன்னான வாய்ப்பு