மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தான் குடித்தனம் - முதியவரால் பரபரப்பு - கன்னியாகுமரி அண்மைச் செய்திகள்
வீட்டை இடித்து தரைமட்டமாக்கியதால், வேறு வழியின்றி தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைவதாக, முதியவர்ன் மனு அளித்தார்.

கன்னியாகுமரி : வசித்து வந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கியதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைவதாக முதியவர் அளித்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டது.
குழித்துறை விண்ணரத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பன் (72). இவர் வசித்து வந்த வீட்டை, சிலர் இடித்து தரைமட்டமாக்கியதால், வேறுவழியின்றி தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்குவதாக மனு அளித்தார்.
அதில், “நாங்கள் குளித்துறை விண்ணரத்துவிளை பகுதியில் வசித்து வந்தோம். எங்களுக்கு வசிப்பதற்கு வேறு வீடு கிடையாது.
வீட்டைக் காலி செய்ய மிரட்டல்
அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எங்களை வீட்டை காலி செய்யும்படி மிரட்டி வந்தனர். இதற்கிடையில் எனக்கு கண்ணில் ஏற்பட்ட நோய் காரணமாக, எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வந்தேன்.
ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்
இதனைத் தெரிந்துகொண்ட வில்சன், சந்திரமணி, சுனில், சிபின் உள்ளிட்டோர், நாங்கள் குடியிருந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். இதனால் எனது வீட்டில் இருந்த ஐந்து சவரன் நகை, வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன. தற்போது எனக்கு குடியிருக்க வீடு இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்துள்ளேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹேக்கர்கள் மிரட்டுகிறார்கள்... குமரியில் புகார்