கன்னியாகுமரி மாவட்டம் செட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பலீலா (45). இவரது கணவர் கூலி வேலை பார்த்து வரும் நிலையில், மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் புஷ்பலீலா பணியாற்றி வந்தார். இவர், சுய உதவிக் குழுக்களில் தலைவியாகவும் செயல்பட்டு வந்த நிலையில், அதிக கடன்தொகை பெற்றதாகக் கூறப்படுகிறது. தற்போது நிலவி வரும் பொதுமுடக்கத்தால் கடந்த நான்கு மாதங்களாக அவர் பணிபுரியும் நிறுவனத்தில் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
புஷ்பலீலாவை தனியார் வங்கிகள் குழு கடனை கட்டுவதற்கு வற்புறுத்தி வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. இந்நிலையில், திடீரென இன்று கணவர் வெளியில் சென்ற நேரத்தில் பிள்ளைகள் இரண்டு பேரையும் வெளியில் விளையாட செல்லி விட்டு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இறந்து போன தாயின் சடலத்தை பார்த்த பிள்ளைகளின் அழுகுரலை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், புஷ்பலீலா தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் புஷ்பலீலா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: தோட்டக்கலை பயிர்சாகுபடியை வளர்த்தெடுக்க ஊக்கத்தொகை திட்டம் - தமிழ்நாடு அரசு