கன்னியாகுமரி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னகானல் வட்டகானல் வனப்பகுதியில் அரிக்கொம்பன் என்னும் காட்டு யானையின் நடமாட்டம் அதிகம் இருந்தது. மேலும் இந்த யானை தாக்கியதில் 8 பேர் இறந்துள்ளனர். ரேஷன் கடைகளை தாக்கி அரிசியை விருப்ப உணவாக உண்டதால் இந்த யானையை கேரளாவில் அரிக்கொம்பன் என்றும் தமிழகத்தில் அரிசி கொம்பன் என்று பெயரிட்டு அழைத்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அட்டகாசம் செய்யத் தொடங்கிய அரிக்கொம்பன் யானையை தமிழக கேரள எல்லை பகுதியான பெரியார் புலிகள் காப்பகம் முல்லைக்கொடி பகுதியில் கொண்டு விடப்பட்டது. அது அங்கிருந்து காடுகள் வழியாக சுற்றித்திரிந்து கம்பம் நகருக்குள் புகுந்து பெரும் ரகளையில் ஈடுபட்டது.
ஒரு வார கால போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து லாரி மூலம் மிகுந்த பாதுகாப்புடன் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் கொண்டு விட்டனர்.மணிமுத்தாறு பகுதிகளில் பொது மக்களின் எதிர்ப்பு அதிகமாக இருந்ததால் அதனை குமரி மற்றும் நெல்லை எல்கையில் உள்ள அப்பர் கோதையாரின் அருகே உள்ள முத்துகுழிவயல் என்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விடப்பட்டது.
முத்துகுழிவயல் குமரி மற்றும் நெல்லை ஆகிய இரு மாவட்டத்தில் எல்லைப் பகுதிகளாக உள்ளது மட்டுமல்லாமல் கேரளா காட்டு பகுதியும் இணைந்து உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தின் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள ஒரு மலை உச்சிப் பகுதியில் ஏராளமான நீர் நிலைகள் உள்ளது. இவ்விடம் வனவிலங்கு வாழ்வதற்கு ஏற்ற இடம் அந்தப் பகுதியில் கொண்டு விடப்பட்ட அரிக்கொம்பன் யானை, குமரி மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியான மேல கோதையாறு அணையில் தண்ணீர் குடிக்க வந்த காட்சிகள் வனத்துறையினர் வெளியிட்டு உள்ளனர்.
இந்த யானை நிற்கும் இடம் அந்த முத்துகுழிவயல் பகுதி. ஒரு பகுதி நெல்லை மாவட்டமும் இன்னொரு பகுதி நெய்யாற்றின்கரை காட்டுப்பகுதி உள்ளிட்ட கேரளா பகுதிகளும் இணைந்து வருவதால் இந்த யானை மீண்டும் கேரளாவுக்கு செல்லவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே வேலையில் மேல கோதையாறு அணையில் தண்ணீர் குடிக்க வந்ததால் அடுத்து கோதையாறு வழியாக பேச்சிப்பாறை அணை மற்றும் அதன் காட்டு பகுதிகளிலும் இறங்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், மாவட்ட வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து ஏராளமான வனக் குழுவினர் அமைக்கப்பட்டு யானையை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்தனர். மேலும் ஜிபிஎஸ் கருவி யானை மீது பொருத்தப்பட்டுள்ளதால் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை யானை இருக்கும் இடம் பற்றிய தகவல்கள் அம்பாசமுத்திரம் வனத்துறை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தது.
இதற்கிடையே இரண்டு நாட்களாக யானையினுடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தீவிர கண்காணிப்பில் இருந்த அப்பகுதியில் உள்ள வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். யானையை கொண்டு இறக்கி விடப்பட்ட பகுதியில் உள்ள அரை கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் யானை சுற்றி வருவதாகவும், கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் ஏற்கனவே 5 குழுவினர் இந்த யானையை கண்காணிக்க அனுப்பபட்டுள்ளனர். மேலும் முத்துகுழி வயல் பகுதியில் குமரி மாவட்ட வனத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு மையத்திற்கு இரண்டு வன குழுவினர் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அலுவலகம் தகவல் தெரிவிக்கிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்கள் நேற்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், "தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானையானது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடர்ந்த வனப் பகுதியில் விடப்பட்டது. யானையின் நடமாட்டத்தினை களக்காடு முண்டந்துறை வனப்பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். யானையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காலர் மூலம் யானையின் இருப்பிடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அரிக்கொம்பன் யானையானது தற்பொழுது நல்ல உடல் நலத்துடன் உள்ளது. சீராக உணவு மற்றும் நீர் எடுத்துக்கொள்கிறது. தொடர்ந்து இந்த யானையானது வன அதிகாரிகள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜிபிஎஸ் கண்காணிப்பை விட்டு வெளியேறிய அரிக்கொம்பன்..? நெல்லை மலைவாழ் மக்கள் பீதி