கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, செண்பகராமன்புதூர், கொட்டாரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக தோவாளை பண்டாரபுராம் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கனமழை காரணமாக நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உப்பாத்து கால்வாயில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.
இதனால் பாலத்தின் அருகே இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேங்கை மரம் வேரோடு முறிந்து கால்வாய்க்கும் பாலத்திற்க்கும் குறுக்கே விழுந்தது. இதனால் கால்வாய் வெள்ளம் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
வெள்ளத்தின் அழுத்ததினால் நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலை குறுக்கே அமைந்துள்ள பாலம் உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த பொதுபணி துறை அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மரம் முறிந்து கால்வாயில் விழுந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.