குமரி மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் ஆயுர்வேதா, சித்தா மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக மருத்துவ கல்வி துறை இயக்குனர் எட்வின் ஜோ கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது, தமிழகத்தில் தற்போது 2,000 இளங்கலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்களும், 1,758 முதுகலை பட்டப்படிப்பு இடங்களும் உள்ளன. முதுகலை படிப்புகளுக்கான இடங்களை 2000ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம், இந்தியாவில் மருத்துவ இடங்கள் அதிகமுள்ள முதல் மாநிலமாக தமிழகம் திகழும். மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. கவுன்சிலிங் மையங்களை அதிகப்படுத்தவும் ஆன்லைன் முறையில் கவுன்சிலிங் நடத்தவும் நடவடிக்கை வருங்காலங்களில் எடுக்கப்படும். இதுகுறித்து, தற்போது ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.