கன்னியாகுமரி: குமரி மாவட்டம், கடியபட்டினம் மீனவ கிராமத்தைச்சார்ந்த சகாய செல்சோ (37), மற்றும் ஆண்டனி வின்சென்ட் (33) ஆகிய இரண்டு மீனவர்களும் பக்ரைன் நாட்டிலே முதலாளி தராக் மாஜித் என்பவரால், அவரது படகிலேயே மீன்பிடிப்பதற்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள்.
இந்த இரண்டு மீனவர்களும் இம்மாதம் 17ஆம் தேதி பக்ரைன் நாட்டிலேயே மொராக் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்கு ஆழ்கடலுக்குச்சென்றுள்ளார்கள். மூன்று நாட்களிலேயே இந்த மீனவர்கள் மீன்பிடித்து விட்டு கரை திரும்ப வேண்டும். ஆனால், இருவாரத்திற்கு மேல் ஆகியும் இந்த மீனவர்கள் இதுவரைக்கும் கரை திரும்பவில்லை.
இதன் காரணமாக அந்த நாட்டில் உள்ள அனைத்து மீனவர்களும் பக்ரைன் கடல் பகுதி முழுவதும் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை. தெற்காசிய மீனவத்தோழமை வளைகுடா நாட்டில் உள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் தொடர்புகொண்டு தேடிப்பார்த்தும் மாயமான மீனவர்களை இதுவரைக்கும் கண்டுபிடிக்க இயலவில்லை எனக் கூறப்படுகிறது.
மாயமான மீனவர்கள் ஒரு வாரம் ஆகியும் கண்டுபிடிக்க இயலாதது அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவர்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்ற ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாயமான இரண்டு மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்துத் தர மத்திய, மாநில அரசுகள் பக்ரைன் அரசை வலியுறுத்த வேண்டுமென தெற்காசிய மீனவ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: கோவை கார் விபத்து... அடுத்தடுத்து வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்...