தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில்,கன்னியாகுமரி மாவட்டம் வாழ்வச்சகோஷ்டம் கிராமத்தில் அமைந்துள்ள பெருங்குளம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய நீர்த்தேக்கமாகும். இதன் நீர் பயன்படும் பகுதிகளில் பெரும்பாலும் ரப்பர், தென்னை பயிரிடப்பட்டுள்ளது. சில இடங்களில் மட்டும் வாழை பயிரிடப்பட்டுள்ளது.
இந்த பெருங்குளம் நீண்ட காலமாக தூர்வாரப்படாததால் குளத்தில் பெரிய அளவில் மண்ணும், மணலும் இருப்பதை அறிந்த சிலர் மண்ணை கொள்ளையடித்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக குளத்தில் நீர் வரும் வாய்க்காலையும் பொதுப்பணித் துறைக்கு தெரியாமல் வழி மாற்றியுள்ளனர்.
இக்குளம் பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் அப்பகுதியில் நிலத்தடி நீரை பலப்படுத்துவதற்கும் பயன்பட்டு வருகிறது. தற்போது குளத்தில் தேங்கியுள்ள மண்ணும், மணலும் மட்டும் கவனத்தில் கொண்டு குளம் தூர்வாருதல் என்ற பெயரில் பெரும் மணல் கொள்ளை நடத்த சில உள்ளூர், வெளியூர் நபர்கள் முயற்சிப்பதாக தெரிகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பெருங்குளத்திலிருந்து எக்காலத்திற்கும் மண் எடுக்க அரசு அனுமதி வழங்க கூடாது என்று விவசாயிகள், பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.