மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 20ஆவது நாளுக்கு மேலாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிரிலும் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள், பல்வேறு இயக்கத்தினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களில் திருத்தத்தை கொண்டு வர தயார், திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. விவசாயிகளின் போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, இன்று(டிச.16) கன்னியாகுமரி அருகே தமிழ்நாடு தலித் பாதுகாப்பு உரிமைகள் இயக்கம் சார்பில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. பூதப்பாண்டி அருகே நடந்த இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் வயல் வெளியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
பின்னர், அதன் நிறுவனத் தலைவர் தினகரன் கூறுகையில், "விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கவில்லையெனில் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் அனைவரையும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" என எச்சரித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவாக சீக்கிய துறவி தற்கொலை!