கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரத்திற்கு உட்பட்ட பள்ளிவிளை பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் சரியான எடைக்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்கள் வாங்குகின்ற பொருட்களுக்கு, அந்த நாளில் செல்போனில் குறுஞ்செய்தி வராமல், மறுநாள் வருகிறது.
அதோடு, வாங்கிய பொருட்களை விட அதிக அளவில் பொருட்கள் வழங்கப்பட்டதாக, குறுஞ்செய்தி வருவதாகவும் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினருமான சுரேஷ்ராஜன் அந்த ரேசன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் நியாயவிலை கடையை முற்றுகையிட்டனர். சட்டப்பேரவை உறுப்பினரும், உயரலுவலர்களை வரவழைத்தார். இதையடுத்து, பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு, கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. எம்எல்ஏ சுரேஷ்ராஜன் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தது, அலுவலர்களுடன் கலந்தாலோசித்தார்.
குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்கள், முறையாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனை வழங்குவதாக அலுவலர்கள் உறுதியளித்ததன் பேரில், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்னைகள் உடனடியாக களையப்படும் எனவும், அவ்வாறு செய்யப்படவில்லை என்றால் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அலுவலர்கள் கூறினர். அதைத் தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது. பொதுமக்களின் முற்றுகையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா காலத்திலும் கலைக்கு ஓய்வில்லை... 2 ஆயிரம் ஓவியங்கள் தீட்டிய நெல்லை மாணவர்கள்!