இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடி நகர்ப்புற பகுதிகளுக்கு செல்வதைத் தடுக்கவும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுயதொழில் தொடங்கி தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஊரக வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் தமிழ்நாடு அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தின்கீழ் உற்பத்தி தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்சவரம்பு 10 லட்சம் ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வழங்கப்படும் மானிய உச்சவரம்பு 1.25 லட்சம் ரூபாயிலிருந்து 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ஐந்து லட்சம் ரூபாய் வரை 25 விழுக்காடு மானியத்துடன் கடன் பெறலாம். மேலும் தமிழ்நாடு அரசின் மற்றொரு சிறப்புத் திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மாநிலத்திற்கான உச்ச வரம்பு, கடந்த மூன்றாம் தேதி முதல் 30 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு திட்டங்களிலும் அடுத்த ஆண்டு 2020 மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சியிலிருந்து அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்தத் திட்டத்தில் கடன் பெற விரும்பும் இளைஞர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகி விபரங்களை அறிந்து கொள்ளலாம்”. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..