கன்னியாகுமரி: வெறிநாய் கடி காரணமாக 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால், அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர், கண்ணன் புதூர், போன்ற பகுதிகளில் சமீப காலமாக வெறிநாய் தொல்லை அதிகரித்துவருகிறது.
வெறி நாய்களை அப்புறப்படுத்த ஒரு நாய்க்கு 700 ரூபாய் வீதம் பேரூராட்சி, பஞ்சாயத்துகளிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த நிதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெறிநாய் கடி காரணமாக இதுவரை 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து ஊர் மக்களே களமிறங்கி கம்புகளுடன் வெறிநாய் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே வெறி நாய்களால் பொதுமக்கள், கால்நடைகள் பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக இவற்றைப் பிடித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.