கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூர் சுசிந்திரம் தாழாக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த பருவத்திற்கான நெல் அறுவடை முடிந்துள்ளது. அறுவடைக்கு பின் வயல்களில் உள்ள வைக்கோல்களை தனியாக பிரித்து கட்டுகளாக கட்டி விற்பனை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த அறுவடை பருவத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள மொத்த வைக்கோல் கட்டுகளில் 80 விழுக்காடு வைக்கோல் கட்டுகள் கேரளா வியாபாரிகளால் மொத்தமாக வாங்கப்பட்டு அம்மாநிலத்தின் பல பகுதிகளுக்கு குமரி மாவட்டத்தின் எல்லையான களியாக்கவிளை வழியாக லாரி, டெம்போ மூலமாக கொண்டுச் செல்லப்பட்டது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவினால் கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைகள் மூடப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்தாண்டு பருவத்தில் வயல்களில் உள்ள வைக்கோல் கட்டுகளை வாங்குவதற்காக கேரளாவில் இருந்து வைக்கோல் வியாபாரிகள் வரவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் ஏராளமான வைக்கோல் கட்டுகள் தேக்கமடைந்துள்ளதோடு விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த அறுவடை கால பருவத்தில் தரமான வைக்கோல் கட்டு ஒன்று 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஊரடங்கு காரணமாக வைக்கோல் கட்டு ஒன்று 100 ரூபாய் முதல் 120 வரை மட்டுமே விற்பனையாகிறது. இவ்வாறு வைக்கோல் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வேதனையடைந்த விவசாயிகள், வைக்கோல் கட்டுகளை கேரளாவிற்கும் தமிழ்நாட்டின் பிற இடங்களுக்கும் வாகனங்கள் மூலமாக கொண்டுச் செல்ல தமிழ்நாடு அரசு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணி: காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு