கரோனா தொற்று பாதிப்பால் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வருமானமின்றி சிரமப்பட்டு வந்தனர்.
அரசு பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கியது. இருப்பினும் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் முதியோர், மனநல காப்பகங்களில் வசிப்பவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
அங்கு வசிக்கும் ஏராளமானோர் உதவியின்றி தவித்துவருகின்றனர். கரோனா ஊரடங்கின்போது முதியோர், மனநல காப்பகங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து அதன் நிர்வாகிகள் ஈடிவி பாரத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
மனோலயா மனநல காப்பகம் வைத்திருக்கும் மணிகண்டன் கூறியதாவது, "இந்த மனநல காப்பகத்தில் ஆந்திரா, ஒரிசா, காஷ்மீர் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த 60 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், சாலையோரம் சுற்றித்திரிந்தவர்கள் நாங்கள் அழைத்து வந்து பாதுகாத்து வருகிறோம்.
இவர்களுக்கு காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி, சத்தான உணவு, கவுன்சிலிங் போன்றவை வழங்கி வருகிறோம். மேலும் அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா ஆகிய மூன்று கூட்டு முறையில் மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கிறோம். எங்களிடம் தங்கியிருந்த 45 பேர் இதுவரை மனநலம் தெளிவு பெற்று தங்களது குடும்பத்துடன் இணைந்துள்ளனர்.
இவர்களை பராமரிப்பதற்கான நிதி உதவி தனியார் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வந்தன. தற்போது கரோனா ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். இருப்பினும் நண்பர்களிடம் கடன் வாங்கி மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து வருகிறோம்" என்று கூறினார்.
பவ்வர் முதியோர் இல்லம் வைத்து நடத்தும் ஜெயன் கேஷவ் வென்னி தெரிவித்ததாவது, "இந்த பவ்வர் தொண்டு நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. இதனை மாவட்ட சமூக நலத்துறை கண்காணித்து வருகின்றது. இந்தக் கரோனா காலகட்டத்தில் எங்களுக்கு தேவையான நிதி அரசிடமிருந்து சரியாக கிடைத்தது. அதனால் பணப் பிரச்சினை எதுவும் இல்லை.
அதே நேரத்தில் எங்களிடம் வயதான முதியவர்கள் உள்ளனர். கரோனா முதியவர்களை மிக எளிதாக தாக்கும் என அறிவிக்கப்பட்டதால் நாங்கள் கூடுதல் கவனம் எடுத்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவர், செவிலியர் முதியோர்களை அடிக்கடி பரிசோதித்து வருகின்றனர்.
மேலும் கபசுர நீர் ,முருங்கை இலை கஷாயம், சத்தான உணவு வகைகள் போன்றவற்றை முதியோர்களுக்கு வழங்குகிறோம். முதியோர்களின் தேவையை அறிந்து சரியான நேரத்தில் நிதி அளித்து உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் மணிகண்டன் பேசுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்பது மனநல காப்பகங்கள் உள்ளன. இவற்றில் சுமார் ஆயிரம் மனநோயாளிகள் தங்கியுள்ளனர். அதேபோல மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் உள்ளன. இங்கு சுமார் ஆயிரத்து 500 பேர் தங்கியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் ஏராளமான குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன. கரோனா பாதிப்பால் குழந்தைகளை அவர்களது உறவினர்களிடம் அனுப்பிவிட்டோம். ஆகவே குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.
கரோனா ஊரடங்கால் முதியவர், மனநல காப்பகங்கள் வைத்திருக்கும் நிர்வாகிகள், தனியார் தொண்டு நிறுவனத்திடம் நிதி திரட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அரசு உதவி செய்தால் மட்டுமே காப்பகங்கள் வைத்திருப்பவர்கள் அதில் வசிப்பவர்களை தொடர்ந்து பாதுகாக்க முடியும்.
இதையும் படிங்க: கரோனாவால் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள்