பொங்கல் பண்டிகையின்போது, மக்கள் மலர்களை அதிகளவில் பயன்படுத்துவது வழக்கம். இந்தாண்டு பொங்கலையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் சிறப்பு மலர் சந்தை இன்று தொடங்கியது. பிச்சி மல்லி, சம்பங்கி, ரோஜா, அரளி, தாமரை, வாடாமல்லி, கிரேந்தி, கோழிகொண்டை உள்பட பல்வேறு வகையான பூக்களின் விற்பனை இங்கு அதிகரித்து உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களிலிருந்தும் ஓசூர், திண்டுக்கல், மதுரை போன்ற பல்வேறு ஊர்களிலிருந்தும் பூக்கள் இச்சந்தைக்கு வந்துள்ளன.
சுமார் நாற்பது டன் பூக்கள் இங்கு விற்பனைக்கு வந்துள்ளதால் பூக்களின் விலையும் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. ஒரு கிலோ மல்லிகை நேற்று இரண்டாயிரம் ரூபாயாக இருந்த நிலையில், இன்று விலை உயர்ந்து மூன்றாயிரம் ரூபாயாகவும் பிச்சி 800 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.
மேலும் சம்பங்கி ரூ.300, அரளி ரூ.250, ரோஜா ரூ.200, கனகாம்பரம் ரூ.1500, செவ்வந்தி ரூ.150, வாடாமல்லி ரூ.80 , கோழிகொண்டை ரூ.60, துளசி ரூ.30, ஒரு தாமரை பூ ரூ.10 என்ற அளவில் விலை உயர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பூக்களின் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக பூ வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: போகிப்பண்டிகை உற்சாக கொண்டாட்டம்