சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு முக்கிய நகரங்களை இணைக்கும் நாற்கர சாலை பகுதியாகும். மகாதானபுரம் செல்லும் சாலையில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பை கொட்டும் இடம் உள்ளது. அங்குக் குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணி நடைபெறுகிறது. அதனருகில் சாலையோரம் உள்ள காலி இடத்தில் சமீபகாலமாக உணவக கழிவுகள், கெட்டுப்போன மருந்துக் கழிவுகளைக் கொட்டுவதால் கொசு, நோய் கிருமிகள் உருவாகியுள்ளது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
முதியவர்கள் உடல் நலக்குறைவு உடையவர்கள் நோயாளிகள் என பல தரப்பினரும் இந்த சாலையில் நடைபயிற்சி செய்கின்றனர். இந்த நிலையில் கழிவுப் பொருட்களில் தீ வைப்பதால் ஏற்படும் நச்சுப் புகையால் நடைப்பயிற்சிக்குச் செல்வோர் கடும் அவதியடைகின்றனர். நோயைத் தீர்க்க நடைப்பயிற்சி செல்வோர் இந்த புகையால் புதுப்புது நோய்களுக்கு ஆளாகும் அவலநிலை நடந்து வருகிறது.
இந்நிலையில், நள்ளிரவு குப்பையில் தீ வைத்திருந்ததால் அதிகாலையில் நடைபயிற்சிக்குச் சென்ற இரண்டு பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனை சென்று முதலுதவி பெற்று வீடு திரும்பினர். பொதுமக்கள் நலன் கருதி சுகாதார சீர்கேட்டையும் பல்வேறு பிரச்னைகளையும் ஏற்படுத்தும் இந்த செயலை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கவனித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.