கன்னியாகுமரி மாவட்டம் தோட்டிக்கோடு அடுத்துள்ள மேலகருப்புக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நிகேஷ் (30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேகா (23) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று சுரேகா அதே பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது கீழேகருப்புக்கோடு பகுதியில் இளநீர் கடை நடத்திவரும் முருகன், நிஷாந்த் ஆகிய இருவரும் சுரேகா காதல் திருமணம் செய்ததைக் கேலி செய்து பேசியுள்ளனர்.
ஆத்திரமடைந்த சுரேகா இதை தட்டிக் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து முருகன் மற்றும் நிஷாந்த் ஆகிய இருவரும் சுரேகாவை கீழே தள்ளி கையில் இருந்த அரிவாளை எடுத்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுரேகாவை அக்கம்பக்கதினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து சுரேகா கொடுத்த புகாரின் பேரில் முருகன், நிஷாந்த் ஆகியோர் மீது இரணியல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மார்த்தாண்டத்தில் மேம்பாலத்தில் வீசப்பட்ட மாட்டிறைச்சிக் கழிவுகள் : அப்புறப்படுத்திய காவலர்கள்