கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கைப் பயன்படுத்தி கோயில்கள், கடைகளில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் (ஜூன்.02) கோட்டார் முத்தாரம்மன் கோயிலில் 4ஆவது முறையாக கொள்ளைச் சம்பவம் நடந்தேறியுள்ளது.
இந்நிலையில், கோயில் அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்தத் திருட்டு சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், காவல் துறையினர் இது குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சூழலில், இன்று (ஜூன்.04) வடிவீஸ்வரம் பள்ளத்தெருவில் உள்ள லெட்சுமி நாராயணர் கோயிலிலும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பொதுமக்கள் அறநிலையத்துறை அலுவலர்கள், கோட்டார் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், கோயிலில் ஆய்வு நடத்தினர்.
இதில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கோயிலில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், அந்நபர்கள் உண்டியலை பெயர்த்தெடுத்து செல்ல முயன்றதும், ஆனால் அவ்வாறு எடுக்க முடியாத காரணத்தினால் உண்டியலை விட்டுச் சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து கொள்ளை நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
இந்த இரண்டு இடங்களிலும் நடந்த கொள்ளைகளில் பதிவான கைரேகைகள் மூலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர். இந்தக் கொள்ளையில் இரண்டு அல்லது மூன்று பேர் ஈடுபட்டு இருக்கலாம் என்றும், முத்தாரம்மன் கோயிலில் கைவரிசை காட்டியவர்கள் இங்கும் திருட வந்திருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 10 கிலோ போதைப் பொருளை கடத்தி வந்த ஆப்பிரிக்கப் பெண்கள்: சிக்கியது எப்படி?