மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் தலைமையில் சுய உதவிக் குழு பெண்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியதாவது; நாகர்கோவிலில் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடனை சுய உதவிக்குழு பெண்கள் பெற்று சுய தொழில் செய்து வருகின்றனர். கரோனா தொற்று காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால் வருமானம் இல்லாமல் சுய உதவிக் குழு பெண்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இதன் காரணமாக தவணைத் தொகை செலுத்த முடியவில்லை.
ஆனால், நிதி நிறுவன நிர்வாகிகள் சுய உதவிக் குழு பெண்களை தகாத வார்த்தைகளால் மிரட்டி வருகின்றனர். தவணை செலுத்தாததால் அதற்கான வட்டியை அதிகரித்து கணக்கில் காட்டுகின்றனர். இதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இவ்வாறு தகாத செயல்களில் ஈடுபட்டு வரும் நிதி நிறுவனங்களை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செப்டம்பர் 1ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.