சென்னை: திமுக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாடி வருகிறது. இந்த திராவிட மாதத்தின் நிறைவு நாளான இன்று (30-09-2024) கட்சி தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தகவல் தொழில்நுட்ப அணியின் யூடியூப் பக்கத்தில் சிறப்புரையாற்றினார்.
அதில் பேசிய முதலமைச்சர், “நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்க வேண்டும். அவற்றை எடைபோட்டு அடுத்த படிக்கு பாதையைத் தீர்மானிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. நமது வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளது. தமிழினம் ஒடுக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் தமிழன் உயர்ந்து வந்த வரலாறு தி.மு.க. வரலாறு. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் சுயமரியாதையையும், பகுத்தறிவுச் சிந்தனையையும் ஊட்டிய தந்தை பெரியார். அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்த்தினார் பேரறிஞர் அண்ணா.
“கட்டை விரலைக் கேட்டால் பட்டை உரியும்” என சமத்துவத்தை சட்டங்களிலும் திட்டங்களிலும் சமன்படுத்தியவர் கருணாநிதி. அவர் விட்டுச் சென்றுள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
நமது தகவல் தொழில்நுட்ப பிரிவில் “உலகெங்கும் திராவிடம்” என்று திராவிட இயக்க கொள்கைகளால் உலக நாடுகளில் இருக்கும் தமிழர்களின் சிறப்பான நிலையை எடுத்துக்காட்டும் வகையில் வீடியோக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
செப்டம்பர் மாதம் முழுவதையும் #திராவிட_மாதம் எனக் கொண்டாடிய @DMKITWing-இன் பணிகள் பாராட்டுக்குரியது!
— M.K.Stalin (@mkstalin) September 30, 2024
கழக வரலாறு - கொள்கை - அடைய வேண்டிய இலட்சியங்கள் ஆகியவற்றையும் #DravidianModel அரசின் சாதனைகளையும் இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் சிறப்பான முன்னெடுப்புகளால், அணிக்குப்… https://t.co/GTKkbnhhLR
தமிழக இளைஞர்கள் உலகெங்கும் பல்வேறு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பதற்கு சமூகநீதிதான் காரணம். நாம் கொண்டு வந்த ஒவ்வொரு திட்டமும் ஒரு படிக்கட்டு. ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒவ்வொருவர் ஏறும்போதும், ஒரு தலைமுறையே முன்னேறுகிறது.
இவ்வாறு வளர்ச்சியடைந்த பலரின் வீடியோக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களின் அனுபவத்தை மற்றவர்களுக்கு வழிகாட்டும் ’கைடாக’ இருக்கும். திராவிட இயக்கத்தின் சமூகநீதிப் போராட்ட வரலாற்றை திமுக ஆட்சியின் சாதனைத் திட்டங்களைத் திராவிட மாதமான செப்டம்பர் மாதத்தில் மட்டும் சொல்லி முடித்துவிட முடியாது.
நாம் ஆக்கப்பூர்வமான கருத்துகள் விவாதிக்கப்பட வேண்டும். பயனுள்ள கருத்தாக்கங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். இனப் பகைவர்கள் மற்றும் அவர்களுக்குத் துணையானவர்களின் திசைதிருப்பலுக்கு நேரம் கொடுக்கக் கூடாது.
இதையும் படிங்க: திமுக எப்படி உள்ளாட்சியில் நல்லாட்சியை கொடுக்கும்?..நெல்லை கவுன்சிலர் அதிரடி கேள்வி!
சமூக ஊடகங்களில் என்ன ’டிஸ்கஸ்’ செய்கிறீர்கள் என்று நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இங்கு பேசப்படும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது. பொய்களையும், அவதூறுகளையும், பாதி உண்மைகளை மட்டும் சொல்லிச் சிலர் குழப்புவார்கள்.
எந்தச் செய்தி வந்தாலும் ‘எமோஷனலாக’ மட்டும் அணுகாதீர்கள்; அந்தச் செய்தி பற்றிய உண்மைத்தன்மையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் தந்தை பெரியார் சொன்ன மானமும் அறிவும், மனிதருக்கு அழகு” என்றார்.
மேலும் இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவிட்டுள்ளார். அதில் இந்த இணையவழி அரசியல் பயணத்தை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் மாநிலம் முதல் கிளைக் கழகங்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்