கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த்துறை சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படை அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் சுற்றி வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ரேஷன் பொருள்கள் கடத்தப்படுவதை கண்டுபிடிக்க வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பறக்கும் படை அலுவலர்களுக்கு ஆரோக்கியபுரம் கடற்கரை பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அலுவலர்கள் குழு அங்கு விரைந்து அப்பகுதியை சுற்றி வந்த போது, அரிசி மூட்டைகள் தார் பாயால் மூடப்பட்டிருந்ததை கண்டனர்.
அதனை திறந்து பார்த்தபோது அதில் 4 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசி சிறிய மூட்டைகளில் இருந்ததை கண்டனர். அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், ரேஷன் அரிசியை நாகர்கோவிலில் உள்ள கோணம் குடோனில் ஒப்படைத்தனர். இந்நிலையில், ராமன் துறை கடற்கரையிலும் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டதாக அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கும் நான்காயிரம் கிலோ ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிசியையும் கைப்பற்றிய அலுவலர்கள், காப்பு காடு குடோனில் ஒப்படைத்தனர்.