கன்னியாகுமரி மாவட்டம், குறும்பனை கிராமத்தில் தற்போது பெய்துவரும் கனமழையால் பெரியகுளம், காக்கை குளம், தாமரைக்குளம் ஆகிய மூன்று குளங்களும் நிறைந்து ஒரே நேரத்தில் தண்ணீர் முழுக்க வெளியேறியது. இதன் காரணமாக, வயல் காலனி பகுதியில் உள்ள 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்வாய்ப்பாக அங்குள்ள இளைஞர்களும், குடியிருப்புவாசிகளும் மீட்புப் பணியில் விரைவாக இறங்கி, எந்தவித உயிரிழப்பும் ஏற்படாமல் செயல்பட்டனர். வீடுகளில் மீட்கப்பட்டவர்கள் புனித இஞ்ஞாசியார் பள்ளியிலும் கல்யாண மண்டபத்திலும் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறும்பனை பாலத்திற்கு தெற்கு பக்கம் உள்ள 150 வீடுகளில் முழுவதுமாகத் தண்ணீர் புகுந்து, இதுவரை கண்டிராதப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரிசெய்ய மக்கள் கோரிக்கை வைத்தும் ரீத்தாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியன் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் அப்பகுதியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை விட்டு வெளியேறி பள்ளியிலும், மண்டபத்திலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு உணவு பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட வீடுகளை பராமரிப்புப் பணிகளைச் செய்ய இழப்பீடு வழங்க வேண்டும். அந்தப் பகுதியிலிருக்கும் மிகவும் பலவீனமான சிங்காரவேலர் தொகுப்பு வீடுகளை மாற்றிவிட்டு, புதிய வீடுகள் கட்டி வழங்க வேண்டும். பாதிப்புக்கு உள்ளான தாமரைக்குளம், காக்கை குளம், பெரியகுளம், கடப்பறகுளம் போன்ற குளங்களில் கரைகளைப் பலப்படுத்தி, மதில் சுவர் எழுப்பி போதுமான பாதுகாப்புப் பணிகளை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நெய்தல் மக்கள் இயக்கம் அரசுக்கு விடுத்துள்ளது.
இதையும் படிங்க: கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்