குமரி மாவட்டம் இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தா. கணவரை இழந்த இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. உறவினர்கள் யாரும் உதவாத நிலையில், தனது மகளை வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வறுமையில் வாடி வந்தார் சாந்தா.
இந்நிலையில் பக்கத்து ஊரான புதுவிளைப் பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (40) என்பவருடன் சாந்தாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் சாந்தா வீட்டிலேயே தங்கி கேரளாவிற்கு கட்டட வேலைக்குச் சென்று வந்துள்ளார். பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாந்தாவை முறைப்படி திருமணம் செய்த சசிக்குமார், சாந்தா, பெண் குழந்தை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படித்துவந்த சாந்தாவின் 13 வயது சிறுமிக்கு அடிக்கடி உடல் நலம் குன்ற ஆரம்பித்ததால், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உடல் பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் இது குறித்த தகவலை காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
குளச்சல் மகளிர் காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து மாணவியிடம் ரகசிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தனது தாயாரின் இரண்டாவது கணவரான சசிக்குமார், கேரளாவிலிருந்து வீட்டிற்கு வரும்போது குடிபோதையில் வருவதாகவும், வீட்டிற்கு வந்தஉடன் தாயார் சாந்தாவிடம் பணத்தைக் கொடுத்து கடைக்குப் பொருட்கள் வாங்க அனுப்பிவிட்டு, தன்னை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அதனாலேயே மாணவி கர்ப்பம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சசிக்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சசிக்குமாரைக் கைது செய்து சிறையிலடைத்தனர். மாணவிக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வறுமையைப் பயன்படுத்தி விதவையை இரண்டாவது திருமணம் செய்த சசிக்குமார், அவரது 13 வயது மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.