குமரி மாவட்டத்தில் விவசாயம், கட்டடத் தொழில், மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாக உப்புத்தொழில் நடைபெற்று வருகிறது. கோவளம், சுவாமிதோப்பு, மணக்குடி ஆகிய பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உப்புத்தொழில் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உப்புத்தொழிலையே நம்பியுள்ளனர்.
ஆனால், தற்போது மாவட்டத்தில் சில வாரங்களாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்திலுள்ள அணைகள், குளங்கள் ஆகியன நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கோவளம், மணக்குடி, சுவாமி தோப்பு ஆகிய பகுதிகளிலுள்ள உப்பளங்கள் மழைநீரில் மூழ்கி, பாத்திகளே தெரியாத அளவில் குளம் போல் காட்சியளிக்கிறது.
ஏற்கனவே பாத்திகளில் விற்பனைக்காகச் சேகரித்து வைத்திருந்த உப்புகளையும் மழைநீர் புகுந்து அடித்துச் சென்றுள்ளது. இதனால் உப்பள முதலாளிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தொழிலாளர்களும் வேலை இழந்து, வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
உப்பளங்களின் பாத்திகளில் தேங்கியுள்ள நீரை வடித்து, அதன் வரப்புகளைச் சரிசெய்து, திரும்பவும் தொழில் தொடங்க ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால் அரசு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என உப்பு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.