கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க ஏ.வி.எம் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் தற்போது புதர் மண்டியும், ஆக்கிரமிப்பாளர்களாலும் கழிவு நீர் சாக்கடையாக காட்சியளிக்கிறது.
இதனால் மழை காலங்களில் வரும் பெருவெள்ளம் வழிந்தோட முடியாமல் கால்வாயில் உள்ள கழிவு நீர் வெள்ளத்துடன் சேர்ந்து ஓடை வழியாக அப்பகுதியில் உள்ள ஆசாத் நகர், கொட்டில்பாடு போன்ற ஊர்களில் உள்ளே புகுந்து விடுகிறது.
இதனால் இந்த கால்வாயையும் கழிவு நீர் ஓடையையும் தூர்வாரி கழிவு நீர் குடியிருப்புகளில் புகாதவாறு நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் குளச்சல் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில், தற்போது அடுத்த கனமழை பெய்வதற்கு முன்பாவது இந்த பணியினை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதையும் நகராட்சி நிர்வாகம் சட்டை செய்யவில்லை.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் அனைத்து கட்சியினருடன் இணைந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி இன்று (டிசம்பர் 4) மதியம் பெரியப்பள்ளி - குளச்சல் சாலையில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவஇடத்திற்கு விரைந்த ஏ.எஸ்.பி.பிஸ்வேஸ் சாஸ்த்திரி போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் நகராட்சி பொறியாளர் ஒரு வாரத்தில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.