கன்னியாகுமரி: மீண்டெழும் குமரி இயக்கம் சார்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தேவசகாயம் இன்று (ஏப்.1) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"ஒருவர் கன்னியாகுமரியை குட்டி சிங்கப்பூராக மாற்றுவோம் என்கிறார். படித்தவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அப்படிச் சொல்லலாமா. சிங்கப்பூர் செயற்கையாக உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரில் தண்ணீர் கிடையாது. மலேசியாவில் இருந்துதான் தண்ணீர் செல்கிறது. உலகின் பெரிய ஐந்து துறைமுகங்களில் ஒன்று சிங்கப்பூரில் உள்ளது. பெரிய விமானநிலையம் உள்ளது.
ஆனால், கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை நிறைந்த மாவட்டம். அருமையான நிலம், முக்கடல், மலை என இயற்கையாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் அமைக்கப்படும் நான்குவழிச்சாலை தேவையற்ற ஒரு சாலை. நான்குவழி சாலைக்காக 50 முதல் 60 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி கான்கிரீட் போட்டுள்ளனர். அதன்மூலம் கன்னியாகுமரியை இரண்டாக வெட்டி பிரித்துவிட்டார்கள்.
இதனால் ஒரு பகுதியில் நிலத்தடி நீர் கிடைக்காத நிலை ஏற்படும். நிலத்தடி நீரோட்டத்தைத் தடுத்துவிட்டார்கள். இங்கு மீன், விவசாய பொருள்கள், ரப்பர், தேன் போன்றவற்றை பயன்படுத்தித் தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும். விவசாயம், உணவுப்பொருள், சுற்றுலா ஆகியவற்றைப் பயன்படுத்தி மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும்.
கன்னியாகுமரியில் வெப்பம் 30 டிகிரியை தாண்டியது இல்லை, இப்போது 40 டிகிரி வெப்பம் உள்ளது. நான்குவழிச்சாலை திட்டம் 2019இல் ரூ.709 கோடியில் திட்டமிட்டு ரூ.3 ஆயிரத்து 200 கோடியாகி, இப்போது ரூ. 4 ஆயிரத்து 200 கோடியாகிவிட்டது.
இந்த சாலைக்காக பல இடங்களில் குளங்களில் மண் போடப்படுள்ளது. 36 பெரிய பாலங்கள், 43 சிறிய பாலங்கள் அமைப்பதாக சொல்கிறார்கள். சரியாக திட்டமிடாமல் செய்வதால் ஐந்து வருடம் ஆனாலும் நான்குவழிச்சாலை பணி முடிவடையாது" என்றார்.
இதையும் படிங்க: குமரிக்கு வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு அதிகரிப்பு!