கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் வின்சென்ட். இவருடைய மனைவி மேரிஜெயா அமுதா (45). இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த மெர்லின்ராஜ் என்ற முன்னாள் ராணுவ வீரர் நகையைப் பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மேரி ஜெயா கூச்சலிடவே, நகைகளுக்காக அவரை குளத்தில் தள்ளிவிட்டு மெர்லின்ராஜ் தப்பியோடினார்.
மெர்லின்ராஜை விரட்டி பிடித்த பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆனால் குளத்திற்குள் தள்ளிவிடப்பட்ட மேரிஜெயாவைக் காப்பாற்ற முடியவில்லை. அவரது உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் இன்று உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இதனிடையே, மேரி ஜெயாவின் உறவினர்கள் மற்றும் அவரது சொந்த ஊரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு முழக்கங்கள் எழுப்பினர். மெர்லின்ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய உறவினர்கள், மெர்லின்ராஜின் கூட்டாளிகளையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதுவரை மேரிஜெயாவின் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:புதுச்சேரியிலிருந்து 1,100 லிட்டர் சாரயம் கடத்த முயன்றவர் கைது!