கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியில் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் சுதா , வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர் ராஜ் தலைமையிலான குழுவினர் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டு கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு சொகுசு காரை நிறுத்த முயன்ற போது கார்கள் நிற்காமல் சென்றது.
இதனைத் தொடர்ந்து, அந்த வாகனங்களைப் பின்தொடர்ந்து விரட்டி சென்ற அலுவலர்கள் ஒரு காரை களியக்காவிளையில் வைத்து மடக்கிப் பிடித்தனர். இதேபோல், மற்றொரு வாகனத்தை தொலையா வட்டம் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர். இந்த இரு வாகனங்களில் இருந்த ஓட்டுநர்கள் காரை நிறுத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து, இரு வாகனங்களையும் அலுவலர்கள் சோதனை செய்து பார்த்தபோது வாகனத்தினுள் சுமார் மூன்று டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கபட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைக்கின்ற இலவச ரேஷன் அரிசியைக் கேரளாவிற்கு வாகனத்தில் கடத்த முயன்றது தெரிய வந்தது.
தொடர்ந்து, அலுவலர்கள் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அரிசியை காப்பிகாடு அரசு நுகர்வோர் கிடங்கிலும், சொகுசு வாகனத்தை விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர் . மேலும் தப்பி ஓடியக் கடத்தல் நபர்கள் யாா் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வாணியம்பாடியில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!