இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு, ஆண்டு தோறும் ரமலான் மாதத்தின் 30 நாட்களும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக மசூதிகளில் நடைபெற வேண்டிய தொழுகை அனைத்தும் தகுந்த இடைவெளியை கருத்தில்கொண்டு அவரவர் வீடுகளில் நடத்திக்கொள்ளுமாறு மாநில அரசு அறிவுறுத்தியது.
இதனால் ரமலான் மாதத்தில் நடைபெறும் தராவீஹ் தொழுகையும், மாலையில் நோன்பு திறக்கும் நிகழ்வு உள்ளிட்ட அனைத்தும் அவரவர் வீடுகளிலேயே மேற்கொள்ளப்பட்டது. 30 நாள்கள் நோன்பு முடிந்த பின் பிறை கண்டு கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் நாளை நடைபெற உள்ள நிலையில், கேரளாவிலும், அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது.
இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வான ரமலான் சிறப்பு கூட்டு தொழுகையை இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே செய்தனர். தொழுகைக்கு பின் சிறுவர்களும் சிறுமிகளும் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தனர். கரோனா ஊரடங்கு தடை காரணமாக வீடுகளிலேயே ரமலான் கொண்டாடியதால், பரபரப்பாக காணப்படும் மசூதிகள் அனைத்தும் இன்று அமைதியாகவே காட்சியளித்தன.
இதையும் படிங்க: ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு!