கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் அமைந்துள்ள ரோகினி பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, 'கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வியை கொண்டு ஒருவன் உயர்ந்த பதவிகளை எட்ட முடியும் .எந்த துறையை மாணவர்கள் தேர்வு செய்தாலும் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் ஏதாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியை விரும்பிப் படிக்க வேண்டும். கல்வி தான் உலகத்தைச் சரியாக பார்க்க உதவும் ஆயுதம். மாணவர்கள் படிக்கும் போதே தன் துறை தவிர்த்து பிற துறைகளில் சிறந்த அறிஞர்களின் நூல்களையும் படிக்க வேண்டும்.
எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி தான் கிடைக்கிறது. எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும் அதில் உயர்ந்த இடத்தை நோக்கி பயணிக்க வேண்டும். பொறியியல் துறையைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி வெற்றி பெறுகின்றனர். நம்மில் பலருக்கு ஆங்கிலம் பற்றிய பயம் இருக்கிறது. உயர்ந்த பதவியை அடைய ஆங்கிலமோ, ஏழ்மையோ தடையில்லை. இளம் தலைமுறைக்கு பொறியியல் படிப்பின் அருமை தெரியவில்லை. அவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் தெரியாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் சிந்திக்கும் திறன், பேரார்வம், தொடர்புத்திறன், ஒத்துழைப்பு பிறருக்கு உதவும் எண்ணம் ஆகியவற்றை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும். எந்த துறையானாலும் முக்கியத் தகுதியாக கருதப்படும் மொழி ஆளுமையை பெற தினசரி செய்திகளை தொடர்ந்து படித்தாலே அவற்றை மேம்படுத்திக் கொள்ளலாம். விடாமுயற்சி உழைப்பு அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இன்றியமையாதது என அவர் தெரிவித்தார்.