இந்தியாவில் 'ஹாம் பெஸ்ட் ஆப் இந்தியா 2019' என்ற தன்னார்வ வானொலி ஆப்பரேட்டர்கள் கலந்துகொள்ளும் மூன்று நாள் மாநாடு கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. இதில் கத்தார், வங்க தேசம், நேபாளம், ஜப்பான் மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் அஸ்லாம் கூறியதாவது:
''இது ஒரு விஞ்ஞான போக்குக்கான பொழுதுபோக்கு அமைப்பாகும். உலகளவில் தொலைத்தொடர்பு கூட்டமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் கூடும் மாநாடு இது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டில் இதன் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்கின்றனர். இதில் தற்போது தொலைத்தொடர்பில் நிலவிவரக்கூடிய முன்னேற்றங்கள், விஞ்ஞான வளர்ச்சிபற்றி பேசப்படுகிறது.
மேலும் இந்த விஞ்ஞான பொழுதுபோக்கை எவ்வாறு வளப்படுத்துவது, எவ்வாறு மக்களிடம் கொண்டுசேர்ப்பது பற்றிய விளக்கங்கள் பேசி முடிவெடுக்கப்படுகிறது. மேலும் இந்தக் காலக்கட்டத்தில் சந்தையில் கிடைக்காத அரிய மின்னணு பொருள்களை இங்கு விற்பனைக்காகவும் கண்காட்சிக்காகவும் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் பற்றியும் இங்கு விளக்கி கூறப்படும்.
தனிநபர் தன்னார்வ வானொலி என்பது அகில இந்தியா வானொலியின் மற்றொரு தொலைத்தொடர்பு சாதனமாக கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவருகிறது. வானொலி நிகழ்ச்சி வரிசையில் புதிய மைல்கல்லாக இது இருக்கிறது.
தன்னார்வ வானொலி (ஹாம் பெஸ்ட் இந்தியா) என்ற தகவல் தொடர்பு தனி மனிதன் இருக்கும் இடத்தில் இருந்தே ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பண்பலை எண்ணைப் பயன்படுத்தி எந்தத் தகவலையும் உலகப்பந்தில் பரப்பிவிடலாம். குறிப்பாக கால நிலை மாற்றம், பேரிடர், புயல், மழை என பல்வேறு எச்சரிக்கை, பாதுகாப்பு தகவலுக்கு உதவியாக இது இருக்கிறது. குமரி முதல் காஷ்மீர் வரையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதன் இணைப்பு உள்ளது.
ஹாம் போஸ்ட் இந்தியா அல்லது தன்னார்வ வானொலி பணிக்கு தேர்வு எழுதி வெற்றிபெற்றவர்கள் பணி ஓய்வு இல்லாது பணியாற்றக்கூடிய துறையாக இது திகழ்கிறது. இந்தியாவில் பட்டம் பெற்றும் பணியில்லாது இருக்கும் இளைஞர்கள் இந்தத் தேர்வை எழுதி வெற்றிபெற்றால் சுய வேலை வாய்ப்பைப் பெறமுடியும்'' என்றார்.
இதையும் படிக்க: "2025ஆம் ஆண்டுக்குள் அனைத்துவகை கழிவு நீரும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் - குடிநீர் வழங்கல் வாரிய இயக்குநர் பிரபு சங்கர்!