கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மீனவர்கள் குடிபெயர்ந்த தொழிலாளர்களாக கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில்வேலை செய்துவருகிறார்கள்.
மீனவர்கள் அங்கு சென்று தொழில் செய்வதால் மீன் ஏற்றுமதியில் குஜராத் முதலிடத்திலும் கேரளா இரண்டாம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில், "கேரள அரசு, மேற்குவங்க மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியது போன்று தமிழ்நாடு மீனவர்களுக்கும் வழங்க வேண்டும்.
தற்போது நோய்த்தொற்று காரணமாக மீனவர்கள் வெளிமாநிலத்தில் சென்று தொழில்செய்ய முடியாத நிலை உள்ளது. அங்கிருக்கும் படகுகளும் சேதம் அடையும் நிலையில் உள்ளன.
இன்னும் 38 (நேற்றுமுதல்) நாள்களில் தடைக்காலம் முடியவுள்ளதால் அந்த மாநிலங்களில் சென்று தமிழ்நாடு மீனவர்கள் தங்கள் படகுகளைப் பழுதுபார்க்க, அரசு வழிவகுக்க வேண்டும்.
அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு மீனவர்கள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று தொழில்செய்வதற்கான வசதிகளை உருவாக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.