கன்னியாகுமரி: குடிநீர், மின்சாரம், சாலை வசதி உள்ள அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதில் பல இடங்களில் மனு கொடுத்தும் அதிகாரிகள் அதை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுத்தி பொதுமக்களை வேதனைக்கு ஆளாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணாட்டுவிளை பகுதியைச் சேர்ந்த ஜென்சி மலர் என்ற பெண்மணி அவரது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு இரணியல் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்து 5 மாதமாகியும், இதுவரை குடிநீர் இணைப்பு வழங்காமல் அந்த பெண்மணியை அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர்.
இதுவரை வீட்டிற்கான குடிநீர் இணைப்பு கொடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாததால் மனம் வெறுத்துப் போன அந்த பெண்மணி தனது குழந்தையுடன் நேற்று மாலை இரணியல் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஜென்சி மலர் வசித்து வரும் நான்காவது வார்டு கவுன்சிலருக்கு இந்த பெண்மணி மீது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, குடிநீர் இணைப்பு கொடுக்க இரணியல் பேரூராட்சி செயல் அலுவலர் லட்சுமி என்ற அதிகாரி மூலம் தடை ஏற்படுத்துவதாக ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த செயல் அலுவலர் இந்த பெண்ணிடம் உனக்கு குடிநீர் இணைப்பு தர இயலாது என்றும், யாரிடம் நீ போய் புகார் தெரிவித்தாலும் உனக்கு குடிநீர் இணைப்பு தரமாட்டேன் என திட்டவட்டமாக மறுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பெண்மணியின் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கொடுக்க அப்பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஒரு பொய்யான தகவலையும் அவர் கூறி வருவதாக கூறப்படுகிறது.
ஆகையால் இந்த சம்பவம் குறித்து ஜென்சி மலர் மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அப்போது அதிகாரிகள் குடிநீர் இணைப்பு கொடுக்க கூறியுள்ளனர். ஆனால் உயர் அதிகாரி கூறியும், இதுவரையில் தன்னிச்சையாக ஜென்சி மலர் வீட்டிற்குக் குடிநீர் இணைப்பு கொடுக்க அதிகாரி மறுத்து வருகிறார்.
முன்னதாக, ஜென்சி மலர் தனது வீட்டிற்கு குடி தண்ணீர் இணைப்பு கேட்டு இரணியல் பேரூராட்சியில் மனு அளித்துள்ளார். இந்நிலையில் தண்ணீர் இணைப்பு கேட்டு அருகாமையில் இருக்கும் என்னிடம் கூறாமல் எப்படி பேரூராட்சி அலுவலகத்திற்கு மனு கொடுத்தாய் என்று கூறி தகராறில் கவுன்சிலரும் அவரது கணவர் பிரபு ராஜ் பிரச்சினை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபு ராஜ், ஜென்சி இருசக்கர வாகனத்தில் வரும் போது அவரை வழிமறித்து கீழே தள்ளிவிட்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த ஜென்சி கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் ஜென்சி அளித்த புகாரின் பேரில் போலீசார் பிரபுராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் விமான நிலையத்தில் 4 அரிய வகை அமெரிக்க குரங்குகள் பறிமுதல்