கன்னியாகுமரி: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மாணவி சென்னையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். பின்பு, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவி கடந்த ஆறாம் தேதி கல்லூரி விடுதியில் அவரது அறையில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் பேராசிரியர் தன்னை பாலியல் ரீதியாகவும், பயிற்சி டாக்டர்கள் இருவர் மனதளவிலும் துன்புறுத்தியதாகவும், தனது சாவுக்கு இவர்கள் மூன்று பேரும் தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தார்.
மாணவியின் தற்கொலை தொடர்பாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதிலும், தனது மகள் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பேராசிரியர் உள்ளிட்ட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட மாணவி கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பேராசிரியர், பயிற்சி டாக்டர்கள் இருவர் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதியப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோதும் மாணவியின் மரணத்தில் தொடர்புடைய பேராசிரியர் ஆகியோரை கைது செய்யாமல் காவல் துறையினர் காலம் தாழ்த்தி வந்தனர்.
கல்லூரி நிர்வாகம் இந்த மூன்று பேரையும் பாதுகாத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் காவல்துறை இதனை விசாரித்தால் முழுமையான நடவடிக்கை எடுக்க மாட்டார்கள், ஆகையால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். உண்மையான குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும்.
மேலும், இதற்கு முன்பாக இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏதேனும் நடைபெற்று உள்ளதா என விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக மகளிர் அமைப்புகள் மாணவ சங்கங்கள் இதனை தொடர்ச்சியாக வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மருத்துவ மாணவி தற்கொலை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அடுத்து, மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் குழு ஒன்றை அமைத்தார்.
அந்த குழு மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் காரணமாக பேராசிரியர், பயிற்சி மருத்துவர்கள் என மூன்று பேரையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும், மாணவியின் மரணம் தொடர்பாக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மூன்று மாணவிகளை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
மேலும், இந்த தற்கொலை தொடர்பாக மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். இதனையடுத்து வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் உட்பட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முன்வந்தனர். இந்நிலையில் பேராசிரியரை கைது செய்து பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அவர் நாகர்கோவிலில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
சிறைச்சாலைக்கு கொண்டு வரும் கைதியை போலீஸ் வாகனத்தில் கொண்டு வருவதுதான் வழக்கம். ஆனால் பேராசிரியரை சொகுசு காரில் முகத்தை மறைத்து ரகசியமாக வி.ஐ.பி. போன்று போலீசார் அழைத்து வந்தது மேலும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில் பேராசிரியர் கைது செய்யப்பட்டதை அறிந்த பயிற்சி மருத்துவர்கள் இருவரும் திடீரென தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை வழக்கினை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு, வழக்கு தொடர்பான ஆவணங்கள் நாகர்கோவில் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிசிஐடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி மற்றும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
மாணவி தற்கொலை தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், மாணவி உடன் படித்த மாணவிகள் உள்ளிட்டோரிடம் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கி இருப்பதால் மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Chennai Crime News:ஹெல்மெட்டை திருடிய காவல் ஆய்வாளர்..