குமரி மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பான்மசாலா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கண்டுபிடித்து அதனை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் இதற்காக தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வந்தார். எனினும் பெட்டிக் கடைகள், சிறு கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த குறைந்தளவிலான பான்மசாலா, குட்கா ஆகியவை மட்டுமே சிக்கியது.
ஆனால் இவர்களுக்கு இந்த குட்கா பொருள்களை சப்ளை செய்வது யார்? எங்கிருந்து வருகிறது? என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறி வந்தனர். எனவே குட்கா மொத்த வியாபாரியை கண்டுபிடிப்பதற்காக ரகசிய கண்காணிப்பில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே ஒரு வீட்டில் ஏராளமான பான்மசாலா வைக்கப்பட்டிருப்பதாகத் தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஏஎஸ்பி ஜவஹர் தலைமையிலான காவல் தனிப்படையினர் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களையும், 7 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
காட்டுப்புதூரைச் சேர்ந்த ஆறுமுகம், அவருக்கு உதவியாக இருந்த இரண்டு பணியாளர்களையும் தனிப்படையினர் கைதுசெய்தனர். விசாரணையில் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களுக்கு இந்த ஆறுமுகம் மூலம் தான் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்கள் சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: கோயில்களில் கொள்ளையடித்த திருட்டு கும்பல் இரு நாள்களில் கைது!