கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் ஆடி மாதம் மகம் நட்சத்திரமும், பஞ்சமி திதியும் வரும் நாளில் நாட்டில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள், பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழவும் நிறைபுத்தரிசி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
வயல்களில் அறுவடை செய்யப்படும் நெற்கதிர்களை முதலில் கோயிலுக்கு கொண்டுவந்து பூஜை செய்த பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நடைமுறை திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சிக் காலம் தொட்டு இருந்துவருகிறது. இந்த நெற்கதிர்களை வீட்டில் வைத்தால் ஆண்டு முழுவதும் உணவுப் பஞ்சம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இதுபோன்று கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் சன்னதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் சன்னதி, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம், நாகராஜர் கோயில் போன்ற பிரசித்திப்பெற்ற புண்ணிய ஸ்தலங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை தரிசனம் செய்த பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.