கன்னியாகுமரி: கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் இருந்து வெளியே வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரண விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்; தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு இதனைக் கட்டுப்படுத்த முன் வர வேண்டும் என நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று (ஜன.22) நடந்த 'ஸ்ரீமத் பகவத் கீதை' புத்தகம் வெளியீட்டு விழாவில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, இந்து மகாசபை அகில இந்திய தலைவர் தா.பால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, 'கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்திலிருந்து அவசரம் அவசரமாக வெளியேறிய சுபஸ்ரீ என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தில் காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே வேளையில், தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இளைஞர்கள் மத்தியில் கஞ்சா புழக்கமும் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு அரசு இதனைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும்' என்றார்.
மேலும் பேசிய அவர், 'தேர்தலில் போட்டியிட அதிமுக பிரிந்து அணிகளாக நிற்காமல் ஒரே அணியாக நிற்க வேண்டும்; அதுதான் நல்லது. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்த கருத்துகளின் படி 'தமிழகம்' வேறு 'தமிழ்நாடு' வேறு என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை' என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் போட்டியிட்டால் நோட்டாவுக்கும் கீழ் வாக்கு வாங்குவார் - ஜெயக்குமார்