கன்னியாகுமரி: தென்னக ரயில்வேயில் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் முக்கிய ரயில்வே நிலையமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில்வே நிலையம் உள்ளது.
இந்த ரயில்வே நிலையத்திலிருந்து தினசரி சென்னை, மதுரை, கோவை, பெங்களூரு, உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தினசரி 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தென்னக ரயில்வே நிலையங்களிலேயே ஆண்டிற்கு 74 கோடி வருவாய் ஈட்டித்தரும் முக்கிய ரயில்வே நிலையமாக நாகர்கோவில் நிலையம் உள்ளது.
கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து தினசரி நாகர்கோவில் வழியாக நெல்லை, மதுரை திருச்சி மார்க்கமாக சென்னைக்கு இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் அக்டோபர் மாதம் முதல் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வராமல் நாகர்கோவில் டவுன் ரயில்வே நிலையம் வந்து, அங்கிருந்து பைபாஸ் வழியாக நெல்லை மார்க்கத்தில் செல்லும் வகையில் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு அறிவித்துள்ளது.
நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரியாக மாற்றவேண்டும்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தான் ரயில் பயணிகளும் சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் நகரின் வெளிப்புறம் இருப்பதால் பயணிகள் செல்வது சிரமம். மேலும் போக்குவரத்துக்கு வசதிகள் குறைவு. எனவே, இந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் அல்லது நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள பைபாஸ் பாதையில் ஒரு பிளாட்பார்ம் அமைத்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்றவேண்டும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே ரயில் பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் பயணிகள் டிக்கெட் கிடைக்காதபட்சத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை சென்னை செல்வதற்காகப் பயன்படுத்தி வந்தனர். அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வராமல் சென்றால் பயணிகள் அந்த வாய்ப்பையும் இழப்பார்கள் என்று கூறிய நாகர்கோவில் ரயில் பயணிகள் சங்கத்தினர் எதிர்காலத்தில் குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ், கொல்லம்-மதுரை உள்ளிட்ட பல ரயில்களை நாகர்கோவில் சந்திப்பிற்கு வராமல் செல்ல ரயில்வே நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளதாக நாகர்கோவில் ரயில்வே பயணிகள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதன்மூலம் ஆண்டுக்கு கிடைக்கவேண்டிய 74 கோடி ரூபாய் அதிக வருவாய் இழப்பும் ரயில்வே நிர்வாகத்திற்கு ஏற்படும் என்றும் நாகர்கோவில் ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: நாகர்கோவில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 80 சவரன் நகைகள் கொள்ளை