தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த அரசு தடைவிதித்துள்ளது. இதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவும் அதனை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மீண்டும் அதிகரித்து வருவதாக மாநகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆணையர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில், கோட்டாறு, வடிவீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதமும், ஏற்கெனவே அபராதம் விதித்து இரண்டாவது முறை பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு கூடுதல் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் பொழுது கோட்டாறு பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை குடோன் கண்டுபபிடிக்கப்பட்டு அங்கு இருந்த 4 டன் அளவிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ரூபாய் 85 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.