கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரசின் செயல்தலைவருமான வசந்தகுமார், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவம் பெற்றுவந்த நிலையில் நேற்று (ஆக. 28) மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் நாளை (ஆக. 30) அவரின் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள குடும்ப கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக அவரது உடல் சென்னையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் குமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்படுகிறது.
அவரது உடல் நள்ளிரவு அகஸ்தீஸ்வரம் வந்தடையும் என்ற நிலையில் வசந்தகுமாரின் வீடு அமைந்துள்ள பகுதி முழுமையாக காவல் துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் - குறிப்பாக அவரது அண்ணன் மகளும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அகஸ்தீஸ்வரம் வரவுள்ளனர்.
அப்பகுதிகளில் காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் முக்கியப் பிரமுகர்களின் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பார்க்கிங் செய்வதற்கான இடங்களையும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் காவல் துறையினர் ஆய்வுசெய்தனர்.
அவரது வீட்டுப் பகுதியில் உள்ள கோயில் வளாகம், தனியார் பள்ளி வளாகம், விவேகானந்தா கல்லூரி வளாகம் ஆகிய இடங்களை காவல் கண்காணிப்பாளர் ஆய்வுசெய்தார்.
மேலும் கூட்ட நெரிசல் காரணமாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படாதவாறு இருக்க அந்தப் பகுதிகளில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி, சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடர் போன்றவற்றைப் பணியாளர்கள் முன்னேற்பாடாகத் தெளித்துவருகின்றனர்.