தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பரப்புரை செய்வதற்காக பிரதமர் மோடி நாளை (ஏப்.2) மாலை 2 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் எம்.ஆர்.காந்தி, குளச்சல் தொகுதி ரமேஷ், விளவங்கோடு தொகுதி ஜெயசீலன், கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம், பத்மநாபபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான் தங்கம், கிள்ளியூர் தொகுதி தா.ம.க வேட்பாளர் ஜுட்தேவ் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி பேசுகிறார்.
திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்தும் பாஜக, அதிமுக வேட்பாளர்கள் மோடி பரப்புரையில் கலந்துகொள்ள உள்ளனர். மோடி வருகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு வருகிறார்.
இதன் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து அகஸ்தீஸ்வரம் வரை பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரத்தில் பிரதமர் மோடி பேச உள்ள இடம் முழுமையாக காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமரின் வருகையையடுத்து அதற்கான ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று (மார்ச் 31) நடந்தது. அதேபோல், பிரதமரை வரவேற்க ஆங்காங்கே சுமார் 50க்கும் மேற்பட்ட அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில், பங்கேற்கவுள்ள பாஜக, அதிமுக நிர்வாகிகளுக்கான கரோனா பரிசோதனை இன்று (ஏப்.1) நடந்தது. வேட்பாளர்களுக்கும் பரிசோதனை நடந்தது. பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கும் கரோனா சோதனை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: இன்று மதுரை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி- நாளை அதிமுக, பாஜக பிரமாண்ட பொதுக்கூட்டம்!